விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ் மீது கதகளி ஆடிய போதை நண்பர்கள்...

மதுரையில் விபத்தில் உயிரிழந்த நண்பணின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறிநின்று போதையில் குத்தாட்டம் போட்டவாறும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவாறும் இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ் மீது கதகளி ஆடிய போதை நண்பர்கள்...

மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாவாசி-செல்வி தம்பதியினரது மகன் அபிகண்ணன் (21) தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் தனக்கன்குளம் பகுதியிலேயே நேற்று இரவு விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அபிகண்ணன் இன்று காலை உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து., வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்த பின் இறந்த அபி கண்ணனின் உடலை அவரது பெற்றோருடன் ஒப்படைத்தனர். அதன்பின் அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதிக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது இறந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலிருந்து கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனக்கன்குளம் செல்லும் வரை ஆரவாரமாக சென்றதுடன் மட்டும் இன்றி இறந்த நபர் உடல் வைக்கப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் மீது ஏறிநின்று சாலை முழுவதும் அலப்பறை செய்தனர். மேலும் சாலையில் இருந்த தடுப்புகளை சேதப்படுத்தியதுடன், சாலையில் மற்ற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்.

இதனால் வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளைஞர்களின் இத்தகைய செயல் காவல்துறையினரின் முகம் சுழிக்கும் வகையில் அமைந்ததுடன் அவர்களை அவர்களின் போக்கை கண்டுகொள்ளாமல் நின்றனர். ஏற்கனவே அதிவேகமாக சென்று விபத்தில் உயிரிழந்த நண்பரின் உயிரிழப்பை பொருட்படுத்தாமல் மது போதையிலும், நண்பனின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடல் வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் மீது ஏரி ஆட்டம் போட்ட இளைஞர்களின் இத்தகைய சாகசங்கள் பார்ப்போரை வேதனை அடையச் செய்தது.