கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் பிணையில் உள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு கொடநாட்டில் உள்ளது. இந்த கொடநாடு வீட்டில் அவர் மறைந்த சில மாதங்களிலேயே காவலாளியை கொன்று கொள்ளைச் சம்பவம் நடந்தது. அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், ஏராளமான சிடி மற்றும் பென்டிரைவ் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த கொலை-கொள்ளை அதிமுகவின் முக்கியத் தலைவருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.  

வழக்கு விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ. ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை  விசாரணை நடத்தி உள்ளனர்.

கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 23 ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார்.