அத்துமீறலில் ஈடுபட்ட கர்நாடக வனத்துறை...போராட்டத்தில் மீனவர்கள்!

அத்துமீறலில் ஈடுபட்ட கர்நாடக வனத்துறை...போராட்டத்தில் மீனவர்கள்!

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக மேட்டூர் மீன்வளத்துறை சார்பாக அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணையில் இருந்து ஒகேனக்கல் வரையிலான நீர்த்தேக்கப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிப்பதற்கான உரிமம் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.

மீனவர்களைத் தாக்கிய கர்நாடக வனத்துறை

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிப்பாலாறு பகுதியில் கொளத்தூர் சுற்றுவட்டார காவிரி கரையோர பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்கள் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை போட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக வனத்துறை சட்டவிரோதமாக தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும் பறிமுதல் செய்தும் சென்றுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மேட்டூர் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை எடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மீனவர்களை கர்நாடக வனத்துறையிடம் அழைத்துச் சென்ற போது கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம்   

உயர் அதிகாரியிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் தமிழ்நாட்டு மீனவர்களை கர்நாடக வனத்துறை அதிகாரியிடம் அழைத்துச் சென்ற தமிழ்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எச்சரித்ததோடு கொளத்தூர் பண்ணவாடி கிராம மீனவர்கள் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் கர்நாடக மாநில எல்லையான பாலாறு சோதனை சாவடியில் முற்றுகையிட முயன்ற போது கர்நாடக வனத்துறை மற்றும் காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

”மீனவர்களை இனி கைது செய்ய மாட்டோம்”

அப்போது கொளத்தூர் பண்ணவாடி மீனவர்கள் கர்நாடக எல்லையில் மீன் பிடிப்பதாக கூறினர். மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கர்நாடக வனத்துறை அதிகாரிகளிடம் காவிரி ஆற்றில் கர்நாடக எல்லை எங்கு உள்ளது என்பது குறித்து கடந்த 50 ஆண்டுகளாகவே யாரும் காட்டாத நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒகேனக்கல்வரை மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். து நாள் வரை இல்லாத ஒரு சம்பவமாக தற்பொழுது நீர்தேக்கப் பகுதியில் கர்நாடக எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் வந்ததாக கூறி அவர்களின் வலைகளை பறிமுதல் செய்ததோடு மீனவர்களையும் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மக்கள் மீது தாக்குதல்

அது மட்டுமின்றி கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர். அவர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகம், இனிவரும் காலங்களில் கர்நாடக வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த முயற்சியால் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் இனிமேல் கொளத்தூர் பண்ணவாடி மீனவர்களை கைது செய்யமாட்டோம் என்று உறுதி அளித்து பறிமுதல் செய்த மீன் வலைகளை மீனவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கொளத்தூர் பண்ணவாடி கிராம மீனவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்..