நாற்று நடுவதற்கு தயாராகிய அரசு போக்குவரத்து பேருந்து பணிமனை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேறும் சகதியுமாய் காணப்படும் அரசு போக்குவரத்து பணிமனையினால், ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பணிமனை ஒன்று அமைக்கப்பட்டது. இங்கிருந்து, திருப்பதி, பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தரைதளம் சரியில்லாமல் குண்டும் குழியுமாய், சேறும் சகதியுமாய் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இரண்டு முறை ஆட்சி மாற்றங்களைக் கண்டும், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் எற்படுத்தப்படாமல், அரசினால் கைவிடப் பட்ட பகுதியாகவே மாறிப் போயுள்ளது. தற்போது பருவமழை வேறு பெய்து வரும் காரணத்தால், மேடு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், அதிகப்படியான மேடு பள்ளங்களில் ஏறி இறங்குவதால் பேருந்திகளின் படிக்கட்டுகள், மொத்த அழுத்தத்தையும் தாங்கக்கூடிய பட்டைகள் உடைந்து பழுதடைய நேரிடுகிறது. 

அரசு பேருந்து பணிமனை வளாகத்தில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே கள்ளக்குறிச்சி மக்கள் மற்றும் பணிமனை ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.