மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்-ஜி.கே.வாசன்!

மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்-ஜி.கே.வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தா அவர், திமுக அரசின் மின் கட்டண உயர்வு தமிழக மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்

ஏற்கனவே சொத்து வரியை ஏற்றி பொதுமக்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்த இந்த அரசு தற்போது மின் கட்டண உயர்வையும் அறிவித்து மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக இந்த அரசு செயல்படுகிறது. மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

திமுக அரசு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்தால் உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மேலும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களிடம் வாக்கு வாங்கிக்கொண்டு அவர்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி வைத்த திராவிட மாடல் அரசாக இருந்து வருகிறது.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை

மீனவர்கள் பிரச்சனையை பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசோடு பேசி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர் வேலையாக இருக்க கூடாது. படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு நிவாரணத்தைப் பொறுத்தவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் முறையாக வழங்கப்படவில்லை. அதனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இராமநாதபுரத்தில் இரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்காத தான் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல பருந்து விமான நிலைய விரிவாக்க பணிகளை செயல்படுத்தும் போது அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என்றார்.