சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கணவருடன் மூச்சுவாங்க ஓடிச்சென்று மனுதாக்கல் செய்த இளம்பெண்…  

ஆம்பூர் அருகே கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, கடைசி நேரத்தில் கணவருடன் மூச்சுவாங்க ஓடிச்சென்று, வேட்புமனு தாக்கல் செய்த இளம்பெண் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கணவருடன் மூச்சுவாங்க ஓடிச்சென்று மனுதாக்கல் செய்த இளம்பெண்…   

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதே ஊராட்சியை சேர்ந்த 22 வயது இளம்பெண் இந்துமதி, தமது கணவர் பாண்டியனுடன் மனுத்தாக்கல் செய்ய, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலம் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் ஒன்று கூடி, அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அங்கிருந்த இந்துமதி மற்றும் அவரது கணவரை உள்ளே அனுமதித்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நேரம் என்பதால் இந்துமதியும், பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வேகமாக ஓடிச் சென்றனர். ஓட முடியாத இந்துமதியை, அவரது கணவர் கையை பிடித்துக் கொண்டு வேகமாக சென்றார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முன்பு இருக்கையில் அமர்ந்த அவர்கள், ஓடிவந்ததால் மூச்சு வாங்கியதாக தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்த அதிகாரி ஆசுவாசப்படுத்தினார். இந்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பரிதாபமாக இருந்தது.

மனுத்தாக்கல் செய்த பணிகள் நிறைவடைந்த பின்னர், அந்த தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கிராம மக்களின் எதிர்ப்பை மீறி மனு தாக்கல் செய்த இளம்பெண் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியாங்குப்பம் பகுதியில் தமது தாய் வீட்டில் வசிக்கும் இந்துமதிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள சம்பவம், ஆம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.