மக்னாவை பிடிக்க களத்தில் இறங்கிய சின்னதம்பி!!

மக்னாவை பிடிக்க களத்தில் இறங்கிய சின்னதம்பி!!

பொள்ளாச்சி அடுத்த சரளபதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளை பயமுறுத்தி வரும் மக்னா யானையை பிடிக்க கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை, ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் விடப்பட்டிருந்தது. இந்த யானை, அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தது.

இந்நிலையில், தற்போது, மக்னா யானை சரளப்பதி அருகே சில மாதங்களாக முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், அங்கு உள்ள மக்களை தாக்கவும் முற்பட்டுள்ளது. இதனை அடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். ஆனால் வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டி, வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மக்னா யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது வனத்துறையினர் யானையை பிடிக்க ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கி யானைகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

மேலும், முரட்டுத்தனமான மக்னா யானையை கட்டுப்படுத்த, கைதேர்ந்த  கும்கி சின்ன தம்பி யானை தற்போது வனத்துறையினருடன் மக்னா யானையை பிடிக்கும் பணியில் களமிறங்கியுள்ளது. சின்ன தம்பி களத்தில் இறக்கப்பட்டுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க || "I.N.D.I.A கூட்டணியை கண்டு பாஜக பயத்தில் நடுங்குகிறது" மம்தா பானர்ஜி !!