மின்சாரம் தாக்கி 6 கறவை மாடுகள் உயிரிழப்பு!

ஶ்ரீபெரும்புதூர் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், 6 கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  கோவிந்தசாமி, பாலாஜி, மகேந்திரன் இவர்கள் கறவை மாடுகளை வளர்த்து அதன் மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று  மாலை மாடுகளை மேய்ச்சலுக்காக சோமங்கலம் சாலையில் தனியார் பள்ளி பின்புறம் உள்ள காலி நிலத்தில் விட்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த காலி நிலத்தில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதனை அறியாத மாடுகள் மின்கம்பிகளை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. மாடுகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் மின்சார துறை ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் வந்த மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்து மாடுகளின் கால்களில் சிக்கி இருந்த மின்கம்பிகளை வெட்டி எடுத்தனர். மாட்டின் உரிமையாளர்கள் மாடுகள் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாடுகள் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கோவிந்தசாமி என்பவரது 4 மாடுகளும், பாலாஜி மற்றும் மகேந்திரனுக்கு சொந்தமான தலா 1 மாடு என மொத்தம் 6 மாடுகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.