கன்னித்தன்மை பரிசோதனை...மருத்துவ குழு திடீர் விசாரணை...!

கன்னித்தன்மை பரிசோதனை...மருத்துவ குழு திடீர் விசாரணை...!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமிக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது குறித்து மருத்துவக் குழுவினர் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 


சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் குடும்பத்தில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக வந்த புகாரை ஒட்டி, வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கூறியிருந்தார். 

இதையும் படிக்க : ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து, ஆளுநரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி ஆகியோர்  கன்னித்தன்மை சோதனை நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் விஸ்வநாதன், மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் அங்குள்ள போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இருப்பினும், தீட்சிதர்கள் குடும்பத்தில் நடந்த குழந்தை திருமணம் தொடர்பாக மருத்துவக் குழுவினர் தற்போது விசாரணை நடத்தி இருப்பது சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.