காலை உணவுத் திட்டம்; தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு...!

காலை  உணவுத் திட்டம்; தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு...!

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெலங்கானா அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள, சென்னை வந்துள்ள தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத் துறை, அரசுச் செயலாளர் டாக்டர். கிறிஸ்டினா சொங்து , கல்வித் துறை அரசுச் செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் ப்ரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர், பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் சென்னை ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். 

உணவு தயாரிக்கும் கூடத்தில் எவ்வாறு உணவு தயாரிக்கப்படுகிறது, உணவு பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை பள்ளிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது, என்பதை கேட்டு தெரிந்து கொண்டதோடு, உணவை ருசி பார்த்தனர்.

அதை தொடர்ந்து ராயபுரம் ஆரத்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்ட தெலங்கானா அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்களிடத்தில் நாளொன்றுக்கு எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள், பெற்றோர்களின் கருத்துகள் குறித்து கேட்டறிந்தனர். 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காலை உணவு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத், 

" காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளதாக கூறினார்.   தெலங்கானா மாநில அலுவலர்களை போல மற்ற மாநில அலுவலர்கள் விரும்பினாலும் அவர்களும் பார்வையிடலாம்”,  என தெரிவித்தார்.

இதையும் படிக்க   |  கதீட்ரல் சாலை மேம்பாலத்திற்கு இசையமைப்பாளரின் பெயர்...!