சென்னையில் காற்று மாசு…அன்புமணியின் பரிந்துரை!

சென்னையில் காற்று மாசு…அன்புமணியின் பரிந்துரை!

ஐக்கிய நாடுகள் அவையால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ஆம் தேதி ‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசின் கடமை

இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டம் 2019ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டின் காற்று மாசுபாட்டு அளவுக்குக் கீழாக, பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 துகள்மங்கள் அடர்த்தியில் 20% முதல் 30% குறைப்பை 2024ஆம் ஆண்டில் எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்காகும். இத்திட்டத்தில் முதலில் சென்னை மாநகரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலுக்கு பிறகு தான் இத்திட்டத்தில் சென்னை சேர்க்கப்பட்டது.

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

 இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் போதிலும் சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மேற்கொள்ள வேண்டிய காற்று மாசு தடுப்புக்கான திட்டங்களை இன்னமும் மேற்கொள்ளவில்லை.

அன்புமணி ராமதாஸின் பரிந்துரைகள்

எனவே, சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கு பின்வரும் 5 நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று செப்டம்பர் 7 ஆம் நாள், நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளில் வலியுறுத்துகிறேன்.

  1. புழுதியை கட்டுப்படுத்த வேண்டும்.
  2. வாகனப்புகையை கட்டுப்படுத்த வேண்டும்.
  3. பேருந்துகளை அதிகமாக்க வேண்டும்.
  4. வாகனமில்லா போக்குவரத்து கொள்கையை செயலாக்க வேண்டும்.
  5. காற்றுத்தர கண்காணிப்பை அதிகமாக்க வேண்டும்.