அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறே, எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம்!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறே, எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம்!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் செய்த தவறினாலே மத்திய அரசு மதுரை எய்ம்ஸ்ஐ கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என விருதுநகர் எம்.பி 
மாணிக்கம் தாகூர் பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிலைமான் புளியங்குளம் விரகனூர் உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டம், ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் அரசுபள்ளி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து பல இடர்பாடுகளை மோடி அரசு செய்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கான திட்டத்தை நிறுத்துவதற்காக சதி வேலையை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. 3000 கோடி தமிழக ஏழை மக்களின் சம்பள பணங்களை மத்திய அரசு பங்கிட்டு கொண்டிருக்கிறது. இதைப்பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதில்லை. 

அவர் தற்போது லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார், அவரைப் பொறுத்தவரை ஏழையும் எளிய மக்களை பற்றி பேசுவதற்கோ, பார்ப்பதற்கோ, சிந்திப்பதற்கோ நேரம் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஏற்கனவே, லண்டன் சுற்றுப்பயணத்தின் போது இலவசமாக ரபேல் வாட்ச் வாங்கி வந்தார்.? தற்போது என்ன பரிசு வாங்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம், எனக் கூறியுள்ளார்.

மேலும், மெட்ரோ வழக்கை கையில் எடுத்தால் முதல்வர் விரைவில் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறியது குறித்து பேசுகையில், அண்ணாமலையை பொருத்த வரை பொறுப்பில்லாமல் பேசுவதும் தகுதிக்கு மீறி பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அவர் ஒன்றும் CBI இயக்குனரோ, அல்லது ED இயக்குனரோ, உள்துறை அமைச்சரோ இல்லை. அவர் வெறும் சாதாரண பாஜக தலைவர். அவருக்கு இருக்கின்ற பொறுப்பை மட்டும் பேசவேண்டும். மிரட்டுகின்ற முன்னாள் போலீஸ் அதிகாரியை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர், எனவும் பேசியுள்ளார்.

மேலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாற்றப்பட்ட ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி குறித்து பேசும்பொழுது, இந்த ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை அரசியல் செய்து வரவிடாமல் தடுத்துவிட வேண்டாம் எனவும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோர் செய்த தவறினாலே மத்திய அரசு மதுரை எய்ம்ஸ்ஐ கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். அதே அரசியலை இதில் செய்துவிடக்கூடாது, எனவும் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு... குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!!!