போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்துவது குறித்தும், அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்தும்  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இதன் பின்னர்  முதலமைச்சர் மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்   இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும். இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவர் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் இந்த வழிமுறைகளை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள மு.க.ஸ்டாலின்மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு உதவி எண்ணை உருவாக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்கள் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.