பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதா...எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன்...!

பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மசோதா...எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன்...!

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் பணியாற்ற முடியாது என்ற சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.

கடைசி நாள் பேரவைக்கூட்டம் :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை அன்றைய தினம் ஆளுநர் உரையால் சர்ச்சையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் கடைசி நாளாக இன்றும் சட்டப்பேரவை கூடியது. 

முதல் நிகழ்வு :

இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ உக்கரபாண்டி ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வினாக்கள்  விடைகள் நேரம் தொடங்கியது.

மசோதா தாக்கல் :

முன்னதாக, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்தும் மசோதாவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  இதில் தமிழில் போதிய அறிவு இல்லாதோர் தகுதிபெற்று பணியில் சேர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி கட்டாயம் என்ற அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில்...பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை தெரிவித்த மா.சு..!

எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன் :

இதற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இச்சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆவேசத்துடன் எதிர்ப்பு தெரிவித்தார். வடமாநிலத்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழை பயின்று தேர்ச்சி பெற்றால் என்ன செய்வது என கேள்வியெழுப்பிய அவர், தமிழ்நாட்டின் பூர்வகுடிகளுக்கு மட்டுமே பணிவழங்க வேண்டும் என சட்டம் திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து சட்டமசோதா, பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.