மகளிர் உரிமைத் தொகை; முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை; முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

கடந்த சட்டமன்ற தோ்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததையடுத்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்தின் மூலம், நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோா் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்த பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.  மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதற்கட்டமாக இதுவரை 79 லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மேலும், நேற்று நடைபெற்ற முகாமில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் கட்ட முகாம்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:” ஹரியானா விவகாரத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மு.க. ஸ்டாலின்.