மகளிர் உரிமைத் தொகை திட்டம்; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கலைஞா் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைக்கவுள்ளாா். 

அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் விழாவில் அவர் இதனை தொடங்கி வைக்கிறார். 

இந்த திட்டத்திற்காக தகுதி அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குக்கு ஒரு ரூபாய் அனுப்பி சரிபார்க்கும் பணி நடைபெற்றது. சோதனை அடிப்படையில் வங்கிக் கணக்கு விவரங்கள் அரசு சார்பில் உறுதி செய்யப்பட்டது. 

மேலும் கலைஞா் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான பிரத்தியேக ஏடிஎம் கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், பயனாளரின் பெயர், கணக்கு எண், வங்கியின் பெயர் போன்ற விவரங்கள் இந்த ஏடிஎம் அட்டையில் இடம் பெற்றுள்ளது. 

இதனிடையே, முதலமைச்சரின் வருகையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:பாதுகாப்பு படை விமான ஒத்திகை..! சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!