மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமா மத்திய அரசு..? சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி...

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமா மத்திய அரசு..? சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி...

2,3, மற்றும் 4ம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்கள் வரும் போது 48 மணி நேரத்திற்கு முன்பு ஆர். டி. பி.சி ஆர் பரிசோதனை, மற்றும் தடுப்பூசி இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.ஆர்.டி.பி.சி.ஆர் எடுக்காத மாணவர்களுக்கு  இன்று இங்கு எடுக்கப்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்ற கூறி இருக்கிறோம். மாணவர்களில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இன்று கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மதம் சார்ந்த நிகழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தொற்று அதிகரித்துள்ளது. 35 மாவட்டங்களில் தொற்று குறைவாக தான் உள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 1.5 சதவீதத்திற்கு மேல் உள்ளது எனவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா தொற்று அதிகரித்து வருகிறது, அதேபோல கேரள மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எல்லை பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி மையங்கள் காலியாக இருக்கும் போது பொது மக்கள் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் மீண்டும் ஒரு அலைக்காக காத்திருக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்  என கேட்டுக்கொண்ட அவர், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால் அடுத்த அலையை தள்ளிபோட முடியும். மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் 2.63 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கையிருப்பில் 12.60 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் என்றார். 

புதிதாக திறக்கப்பட்டுள்ளது 11 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.