சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நிறுத்தப்படுமா...!!

சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நிறுத்தப்படுமா...!!

மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ ஐ டி மெட்ராஸ் வளாகத்தில் மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த கருத்தரங்கம் இயக்குநர் காமகோடி தலைமையில்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் போது செய்தியாளர்களை சந்தித்த ஐ ஐ டி இயக்குநர் காம கோடி,

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்கொலைகளை செய்து கொண்டவர்களை பொறுத்தவரை ஐந்தில் மூன்று பேர் படிப்பில் நன்றாக இருந்தவர்கள் தான்.  பொதுவாக தற்கொலைகளுக்கு  மூன்று காரணங்கள் இருக்கலாம்.  சிறுவயது பிரச்சனை, உடல்நலம், பொருளாதாரப் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை இதில் எது இருந்தாலும் அதனுடன் சேர்ந்து படிப்பும் அவர்களுக்கு அழுத்தமாக மாறி விடுகிறது எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், இதன் காரணமாக மாணவர்கள் படிப்பில் பின்தங்கும் போது படிப்பிலும் அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.  மதிப்பெண் குறைவதால் மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்களாக ஆவது இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார்.

மேலும் மாணவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை மாணவர் தலைவர் வழியாகவோ , புகார் மூலமாகவோ, அல்லது ஆலோசகர் மூலமாகவோ தெரிவிக்கலாம் எனவும் எப்படி தெரியவந்தாலும் முறையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் எனவும் அதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் எதிர்பாராத விதமாக நடந்த சில சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இயன்ற முயற்சிகளை ஐ ஐ டி நிர்வாகம் சார்பில் எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி... இருவர் உயிரிழப்பு!!