தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளம் பெற்றிட ஓயாது உழைத்திடுவோம்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் வீடு வீடாக மக்களுக்கு சென்று சேர்ந்திட  தொண்டர்கள் உழைத்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளம் பெற்றிட ஓயாது உழைத்திடுவோம்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதியின் சிலையை, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தது பெருமைக்குரிய நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில், என்றும் அழியாத தடத்தை கருணாநிதி விட்டு சென்றுள்ளதாக வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியதையும்  முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் சிலை திறப்பு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், திரைத்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.

மேலும் பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவிடம் கட்டும் பணி வெகு விரைவாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அண்ணா சாலையில் பெரியார் விருப்பத்திற்கு இணங்க கருணாநிதி சிலை நிறுவப்பட்டிருந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக அது இடித்து அகற்றப்பட்டதாகவும், தற்போது அதே அண்ணா சாலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்  கருணாநிதி சிலை கோபுரமாய் உயர்ந்து நிற்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் கலைஞரின் 99வது பிறந்த நாளில் சிலையை திறந்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அவர், திமுக  அரசின் சாதனைகளும் திட்டங்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திடும் வகையில்  தொண்டர்கள் உழைத்திட வேண்டும் எனவும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளம் பெற்றிட ஓயாது உழைத்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக்கொண்டுள்ளார்.