புரட்சிகளில் இருந்து தான் உரிமைகளை பெற்றுள்ளோம்...! உயர்நீதி மன்ற நீதிபதி டி.ராஜா...!!

புரட்சிகளில் இருந்து தான் உரிமைகளை பெற்றுள்ளோம்...! உயர்நீதி மன்ற நீதிபதி டி.ராஜா...!!

புரட்சிகளில் இருந்து தான் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுள்ளோம் என உயர்நீதி மன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காசோலை மோசடி வழக்குகளுக்கான இரண்டு கூடுதல் நீதிமன்றங்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குகளுக்கான ஒரு கூடுதல் நீதிமன்றம், சிறிய வழக்குகளுக்காக மெய்நிகர் முறையிலான ஒரு நடமாடும் நீதிமன்றம், ரயில்வே சட்ட வழக்குகளுக்கான ஒரு நடமாடும் நீதிமன்றம் ஆகியவற்றை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.பரத சக்ரவர்த்தி, மாவட்ட முதன்மை எஸ். அல்லி, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தன்பாபு, செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, மெய்நிகர் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றம் வர தேவையில்லை எனவும், எல்லாருக்கும் பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை தீர்க்கவே நீதிமன்றங்களை துவங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, புரட்சிகளில் இருந்து தான் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுள்ளோம் என்றும், தகவல் தொழில்நுட்ப துறையின் புரட்சிதான் காகிதமில்லா நீதி பரிபாலனத்துக்கு கொண்டு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மின்னணு மனு தாக்கல் நடைமுறையில் தொடங்கி காணொலியில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறை வரை தொழில்நுட்பமே காரணம் என தெரிவித்த அவர் இளம் வழக்கறிஞர்கள் வாதங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் முன்வைக்கும்படி அறிவுறுத்தினார்.