கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு...அமைச்சர் தகவல்..!

கீழ்பவானி பாசனத்திற்கு நாளை காலை 8 மணிக்கு கீழ் பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கீழ்பவானி பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்பு...அமைச்சர் தகவல்..!

ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைக்கு எதிராக  மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் இன்று துவக்கி வைத்தார். முன்னதாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் இது குறித்து அமைச்சர், போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என்றும் சுமார் 240 அரசு பள்ளியைச் சேர்ந்த 60 ஆயிரம் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்  என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,  " இந்த நிகழ்ச்சியில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள்  நடைபெறுகின்றன. இதைத் தவிர தனியார் பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். 

போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்ட எல்லைகள், டோல்கேட், பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.  இதுவரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள், மனம் திருந்தி வந்தால் அவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் மறுவாழ்வு ஏற்படுத்தப்படும். மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை. அரசு பள்ளி அருகில் மதுக்கடைகள் இருந்தால் அவைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதலமைச்சர் வரும் 25, 26 ம் தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். சுமார் 85 திட்டங்கள் இதுவரை பரிசீலிக்கப்பட்டு அவரால் துவக்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும். மேலும் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குவார்.
 
கீழ்பவானி அணை நிரம்பி வருகிறது. அதனால் நேற்று கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. எனினும் அதிகாரபூர்வமாக கீழ்பவானி பாசன பகுதிக்கு நாளை காலை 8 மணிக்கு அணையிலிருந்து கால்வாயில் வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடப்படும் " என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாநகர மேயர் நாகரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்