ஈரோடு தேர்தல் : கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்!

ஈரோடு தேர்தல் : கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது..

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கு அதிக வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், கூடுதலாக ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 21 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 8 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி, மாவட்ட  ஆட்சியர் கிருஷ்ணன் தலைமையில் பெல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 98.59 கோடி நிதி ஒதுக்கீடு...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் தற்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களோடு நோட்டாவையும் சேர்த்து, 78 பேருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னத்துடன் வாக்களிக்க வசதி உள்ள நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன.