ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்த குழுமம் அறிவிப்பு! விற்பனையை எதிர்க்கும் மக்கள்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது தொடர்பாக  தினசரி செய்திதாள் ஒன்றில் வேதாந்தா குழுமம் விளம்பரம் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்த குழுமம் அறிவிப்பு! விற்பனையை எதிர்க்கும் மக்கள்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22, 23-ம் தேதிகளில் மக்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக கடந்த ஆண்டு 3 மாதங்கள் மட்டும் ஆலை இயங்கியது. இதையடுத்து மக்களின் தொடர் எதிர்ப்பு, அரசின் அறிவிப்பால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால்,  ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை வாங்க விரும்புவோர் ஜூலை 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் விற்பனை என்ற பெயரில் வேறு யாரும் இது போன்ற காப்பர் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு தூத்துக்குடியில் அனுமதிக்க மாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.