ஆரோவில் முறைகேடு; சி.பி.ஐ விசாரிக்க மனு; அவகாசம் கேட்கும் மத்திய அரசு!

ஆரோவில் முறைகேடு; சி.பி.ஐ விசாரிக்க மனு; அவகாசம் கேட்கும் மத்திய அரசு!

ஆரோவில் அறக்கட்டளையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அல்லது அமலாக்கத் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த விக்ரம் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆரோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், அறக்கட்டளை நிர்வாகத்தின் உடந்தையுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரோவில் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் எந்த வங்கியிலும் கணக்கு இல்லாத நிலையில், அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி, தனிநபர்கள் நிதி வசூலில் ஈடுபட்டதாகவும், இதுசம்பந்தமாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற சட்ட விதிகளை மீறி, விசா காலம் முடிந்தும் பல வெளிநாட்டவர்கள், ஆரோவில்லில் தங்கியிருப்பதாகவும், அறக்கட்டளை வளாகத்துக்குள் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாகவும், போதை பொருட்கள் புழங்குவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகார்கள் மீது அறக்கட்டளை நிர்வாக குழு நடத்திய விசாரணையில், இந்த முறைகேடுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தேசிய அளவிலான புலன் விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என அறிக்கை அளித்துள்ளதாகவும், ஆனால் அறக்கட்டளை நிர்வாகம் தவறிழைத்தவர்களை பாதுகாப்பதாகவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோவில் அறக்கட்டளை முறைகேடுகள் குறித்து சிபிஐ, அமலாக்கத் துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை நிர்வாகக் குழு நடத்திய விசாரணை அறிக்கை, மேல் விசாரணைக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆரோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 21ம்  தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:முன்னாள் எம்.எல்.ஏ மீதான கடத்தல் வழக்கு; 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!