ஏரியில் மீன் பிடிப்பதில் பிரச்னை... கிராமத்தினர் சாலை மறியல்...

திருவெண்ணை நல்லூர் அருகே ஏரியில் மீன் பிடிப்பது சம்பந்தமாக இரு கிராமத்தினர் இடையே பிரச்சனை - ஒரு கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு.

ஏரியில் மீன் பிடிப்பதில் பிரச்னை... கிராமத்தினர் சாலை மறியல்...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள துலுக்க பாளையம் கிராமத்தில் ஏரி மீன் குத்தகை விடுவது சம்பந்தமாக ஜனவரி மாதம் துலுக்க பாளையம் கிராமத்தில் கிராம முக்கியஸ்தர்கள் மத்தியில் நடைபெற்ற ஏலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் 4.10 லட்சம் பணம் செலுத்தி குத்தகை எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் அதற்கு அடுத்த வாரம் மணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி அணை மீன் வளர்ப்பு குத்தகைக்கு ரூபாய் 55 ஆயிரம் செலுத்தி  உரிமை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், இரு கிராமங்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக இந்த மீன் குத்தகை காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக மூன்று முறை சமாதான கூட்டங்கள் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் நடைபெற்று வந்துள்ளன.
 
சென்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி - குப்புசாமி தரப்பினர் மீன் பிடிக்க இறங்கியபோது கிராம மக்கள் சென்று தடுத்தனர். பின்னர் விழுப்புரத்தில் இதுதொடர்பாக அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு தரப்பினர் மீன்பிடிக்க தேவையில்லை அரசாங்கமே மீன் பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். 
 
இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துலுக்கப்பாளையம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர்  கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் திருக்கோவிலூர் - கடலூர் சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.