நச்சுன்னு 8 கேள்வி... எங்கள் தொகுதிக்கு இது வேணும்.. உடனே செய்யுங்க.! அதிரடி கிளப்பும் கதிர் ஆனந்த்..!!

நச்சுன்னு 8 கேள்வி... எங்கள் தொகுதிக்கு இது வேணும்.. உடனே செய்யுங்க.! அதிரடி கிளப்பும் கதிர் ஆனந்த்..!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் தமிழக எம்பிக்கள் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பல முக்கிய அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.  

அதில்,  நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில்  வேலூர் தொகுதி மக்களுக்காக, மத்திய அரசிடம் தான் எழுப்பிய சிறப்பு கேள்விகளும்/ கோரிக்கைகளும் 

1. கொரோனா 

கொரோனாவால் பெற்றோர்களை பறிகொடுத்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காகவும், தங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த தனது ஒரே மகனையோ மகளையோ இழந்து ஆதரவற்று பரிதவிக்கும் முதியோர்கள் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்திற்கும் வழி  ஏற்படுத்தும் வகையில்,

மத்திய அரசு ரூபாய் 500 கோடியில் ஒரு தொகுப்பு நிதி உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகள் வாழ்க்கைக்கு பேருதவியாக தலா ரூபாய் 20 லட்சம் மற்றும் ஆதரவற்ற முதியோர் நலனுக்காக தலா ரூபாய் 10 லட்சம் நிரந்தர வைப்பு நிதி கணக்கை உடனடியாக ஆரம்பித்து அவர்களுக்கு தேவையான சமூகப் பாதுகாப்பும் ஆதரவும் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தினேன் 

2. பணமதிப்பிழப்பு 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, பெரும் நஷ்டத்தை சந்தித்த பல நிறுவனங்கள் இழுத்தே மூடி விட்டார்கள். அவர்களுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 

3. வேலூர் சிஎம்சி மருத்துவமனை 

வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற  சிஎம்சி மருத்துவமனைக்கு இந்தியா முழுவதிலுமிருந்து குறிப்பாக வடக்கு, வட கிழக்கு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க தேவை ஏற்படுகிறது.
ஆனால் நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஓட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாலும் அங்கே அறை எடுத்து தங்க முடியாத ஏழை எளிய  மக்கள், வேறு வழியின்றி பிளாட்பாரங்களிலும், அருகில் உள்ள திறந்த வெளியிலும் தங்குவது வேதனையளிக்கிறது. எனவே அவர்களின் நலனுக்காக 1000 பேர் தங்கும் வசதி கொண்ட யாத்ரி நிவாஸ் (எ) பயணியர் தங்கும் விடுதி கட்டுவது மிகவும் அவசியம்.

4. கேந்திரிய வித்யாலயா

காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா தொடங்க அனுமதி கிடைத்த பிறகும் பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி மெத்தனமாக உள்ளது. எனவே அதனை விரைவுப்படுத்தி, வரும் 2022-23ஆம் கல்வியாண்டிலிருந்து வகுப்புகள் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

5. ஜிஎஸ்டி 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளில் வசூலித்த சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி விவரம், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விவரம், வருங்காலத்தில் இந்த தொகை வழங்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ? என எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 
ஜிஎஸ்டி தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை குறித்த விவரம் அளித்துள்ளார்   
 
6. விமான நிலையங்களின் பாதுகாப்பு 

விமான நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்பட்டுத்துதலை  உறுதி செய்வதற்காக அரசு நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளதா? அதற்கான போதுமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதா ?

7. கோவிட் தடுப்பூசி 

நமது நாட்டில் பயன்பாட்டிலுள்ள Covid 19 தடுப்பூசிகளின் காலாவதி நேரம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் உடலில் அவை எவ்வளவு காலம் வீரியத்துடன் செயல்படும்?

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் கிடக்கும் தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு இதுவரை கணக்கெடுத்து உள்ளதா?பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை அவற்றின் காலாவதி தேதிக்கு முன்னதாக கொள்முதல் செய்து மறு விநியோகம் செய்ய முன் வந்துள்ளதா.. ?

அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? பூஸ்டர் டோஸ் உற்பத்தி, வினியோகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் மத்திய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதா...? பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா..? அதன் விவரங்கள் என்ன..?

8. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரயில்வே மேம்பாலம் 

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றது. தற்போது உள்ள சுரங்கப்பாதை மக்களின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. அது மட்டுமல்லாமல் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகள் வாணியம்பாடி பகுதியில் அதிகம் இருக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாணியம்பாடி செல்பவர்கள் ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்த வழியாக 120 க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் நிலை இருக்கின்றது. தெற்கு ரயில்வே ரூ.16 கோடியில் வாணியம்பாடியில் மேம்பாலம் கட்ட முன்மொழிந்தும் இன்னும் பணிகள் நடக்கவில்லை.

எனவே வாணியம்பாடி ஆம்பூர் பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆம்பூர் ரயில் நிலையத்தில் காவிரி, ஏற்காடு சாம்ராஜ்நகர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.