திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலைய நகராட்சி கழிப்பிடத்தின் அவலநிலை...! பொதுமக்கள் அவதி..!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலைய நகராட்சி கழிப்பிடத்தின் அவலநிலை....

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலைய நகராட்சி கழிப்பிடத்தின் அவலநிலை...!  பொதுமக்கள் அவதி..!

திருப்பத்தூர் மாவட்டம், வி சி எம் தெரு அருகே புதிய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் நகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் ஒப்பந்தம் மூலமாக கட்டணமில்லா கழிப்பிடங்கள் மற்றும் கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. கட்டணமில்லா கழிப்பிடத்தில் நகராட்சியின் மூலம் எந்தவிதமான சுத்திகரிப்பும் செய்யப்படாமல், தண்ணீர் வசதியின்றி, கழிவுகள் வெளியேறி பேருந்து வந்து செல்லும் வழித்தடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியே கொசுக்களின் கூடாரமாக மாறி உள்ளது.

அதேபோல் கட்டண கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் வெளியேறி கால்வாய் வழியாக திறந்த நிலையில் செல்கின்றன. இதிலிருந்தும் அளவிற்கு அதிகமான துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் அதிகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. இந்நிலையில் நகராட்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு  கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், துறை சார்ந்த அதிகாரிகள், மெத்தன போக்காக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.