திருமணம் செய்யவேண்டும் என்று மிரட்டுகிறார்,..திமுக பிரமுகர் மீது பசுவிடம் புகார் கொடுத்த கல்லூரி மாணவி.!  

திருமணம் செய்யவேண்டும் என்று மிரட்டுகிறார்,..திமுக பிரமுகர் மீது பசுவிடம் புகார் கொடுத்த கல்லூரி மாணவி.!  

வாணியம்பாடி திமுக பிரமுகரின் மகன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கொலைமிரட்டல் விடுவதாக நகர காவல் நிலையம் முன்பாக பசுவிடம் கல்லூரி மாணவி  புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜாமணி. இவரது மகள் நந்தினி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நந்தினி +2 படிக்கும் போது ராஜாமணி உறவினரான திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் என்பவர் அவரது மகன் சரவணன் என்பவருக்காக ராஜாமணி மகளான நந்தினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதற்கு நந்தினி மறுத்ததால் கடந்த 08.08.2020ம் தேதி அன்று ராஜாமணி வசித்து வந்த அம்புர்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் திமுக பிரமுகர் ஸ்ரீதர், அவரது மகன் சரவணன் ஆகியோர் நுழைந்து ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை மிரட்டல் விடுத்தும், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜாமணி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையில் அப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் உயிருக்கு பயந்து ராஜாமணி வீட்டை காலி செய்துக்கொண்டு தர்சமையம் நியூடவுன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

ஆனாலும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக திமுக பிரமுகர் ஸ்ரீதர், அவரது மகன் சரவணன், தேமுதிக நகர செயலாளர் சங்கர் ஆகியோர் ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு தொலைபேசி மற்றும் அவரது வீடிற்கு நேரில் சென்று மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராஜாமணி மற்றும் நந்தினி தனி தனியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு சாரவணன் தொலைபேசி மூலமாக நள்ளிரவு ராஜாமணியை தொடர்புகொண்டு நந்தினியை திருமணம் செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி தனது பெற்றோர்கள் உடன் நகர காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். 

ஆனால் காவல் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையம் முன்பாக நின்றுகொண்டிருந்த பசுவிடம் புகார் மனுவை கொடுத்தார். இதனை அறிந்த போலீசார் விரைந்து வந்து நந்தினி மற்றும் அவரது பெற்றோரை  காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்று புகார் மனுவை பெற்றுக்கொண்டனர். மேலும் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட திமுக மாவட்ட மீனவரனி அமைப்பாளர் ஶ்ரீதர் செய்தியாளர்களை அழைத்து புகார் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், அவர்கள் காவல் நிலையத்தில் என் மீது தன் மகன் மீதும் பொய் புகார் கொடுத்துள்ளனர். ராஜாமணி எனக்கு சொந்த மச்சான் முறையாவார்.அவருடைய தம்பி வெங்கடேஷ் என்பவர் என்னிடம் வேலை செய்து வந்தார். அப்போது ரூ 3 கோடிக்கு மேல் ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை காப்பாற்றும் வகையில் அவர்கள் என் மீது பொய் புகார் கூறி வருகின்றனர். பெண் கேட்டது உண்மை. அவர்கள் கொடுக்க மறுத்ததால் திருமண வரத்தை விட்டு விட்டோம் எனக் கூறினார்.