முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சிறப்பு தீர்மானத்திற்கு...முதலமைச்சரின் பதில் என்ன...?

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சிறப்பு தீர்மானத்திற்கு...முதலமைச்சரின் பதில் என்ன...?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்து விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீர்மானம் :

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3 ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இரங்கல் குறிப்புடன்  ஆரம்பிக்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

முதலமைச்சர் பதில் :

அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலமே சமூக நீதியை வழங்க முடியும், அந்த வகையிலேயே திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சாதிய பாகுபாடு சார்ந்த தீண்டாமை அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கிறது, இந்த நிகழ்வு உண்மையில் வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது, கண்டிக்கத்தக்கது என கூறினார்.

மேலும், குடிநீரில் மனித கழிவு கலந்த தகவல் கிடைத்தவுடன் சுகாதாரமான குடிநீர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க உத்தரவிட்டதாக கூறிய அவர், கடந்த 27. 12.2022 அன்று மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதோடு,
உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், 26. 12.2022 முதல் இன்று வரை கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடிநீர் தொட்டி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி நீக்கப்பட்டுள்ளது என ஆய்வில் தகவல் வந்த பிறகு சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக...பாதியில் வெளிநடப்பு செய்தது ஏன்?

அதேபோல், பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வட்டார மருத்துவ அலுவலர், 3 செவிலியர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 10 பேர் கொண்ட மருத்துவ பணியாளர்கள் குழு முகாமிட்டு மக்களுக்கு நோய் தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய்களும், 7 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை 70 விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இது போன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் சரிவு ஏற்படுவதாக அமைந்துள்ளதாகவும், மதம் உன்னை மிருகமாக்கும் சாதி உன்னை சாக்கடையாகும், சாதி மதத்தினை தூக்கிப்பிடித்து பிரிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.