” சனாதனத்தின் உச்சம்தான் வள்ளலார் என்று ஒரு அரைவேக்காடு உளறிக் கொட்டி இருக்கிறது..” - திருமாவளவன்.

” சனாதனத்தின் உச்சம்தான் வள்ளலார் என்று ஒரு அரைவேக்காடு உளறிக் கொட்டி இருக்கிறது..” - திருமாவளவன்.

நாட்டை சனாதன மயமாக்க சிலர் முயன்று கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகத்தை பெரியார் மயம் ஆக்க உழைத்துக்கொண்டு இருப்பவர் ஆசிரியர் வீரமணி தான் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெறிவித்துள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் பொதுவாழ்வை கவுரவிக்கும் வகையில் 90-இல் 80 அவர்தான் வீரமணி என்ற நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

இதில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:- 

” பொது வாழ்வில் எந்த அளவுக்கு ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு சான்றாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். தமிழ் மண்ணில் அரசியல் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த மாபெரும் ஆளுமைகளான பெரியார், அண்ணா ஆகியோரால் உருவாக்கப்பட்டவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் இருந்து ஆசிரியர் அவர்களை பார்த்து  வருகிறோம். ஈழத் தமிழர் பிரச்சினையில்  தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். எங்களை தட்டிக் கொடுத்து நிதானமாக செல்லுங்கள் என்று சொல்லும் தன்மை கொண்டவர்.  

பெரியாருடன், அண்ணாவுடன் இருந்து  வந்தவர் என்பதால், அவரால் இன்றைக்கு சமூகநீதி அரசியல் பாதுகாப்பாக இருக்கிறது. கலைஞர் அவர்களைப் போல அல்லாமல், தேர்தல் அரசியல் களத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும், சரியான நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுப்பவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

”சனாதனத்தின் உச்சம்தான் வள்ளலார் என்று ஒரு அரைவேக்காடு உளறிக் கொட்டி இருக்கிறது”. ஆன்மீகத் தளத்தில் வள்ளலார் ஒரு தந்தை பெரியார், அவர் சனாதன எதிர்ப்பாளர்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்; சாதிய கட்டமைப்பை முற்றாக எதிர்த்தவர். விக்கிரக வழிபாட்டில் வள்ளலாருக்கு உடன்பாடே கிடையாது. நாமெல்லாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கருத்துகள் வள்ளலாருடையது.

அத்தகைய வள்ளலாரை சனாதனத்துடன் இணைத்துப் பேசிய உடனே, அதற்கு எதிராக வடலூரில் ஜூலை 7ல் சமாதான எதிர்ப்பு மாநாடு என்று அறிவித்துள்ளார் ஆசிரியர் வீரமணி.

நாட்டை சனாதன மயமாக்க சிலர் முயன்று கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகத்தை பெரியார் மயம் ஆக்க உழைத்துக்கொண்டு இருப்பவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.  அம்பேத்கருக்கு கூட அமையாத அளவுக்கு, தந்தை பெரியாருக்கு -  அவரது கருத்துகளை பரப்ப ஒரு மிஷன் ஆசிரியர் வீரமணி அவர்கள் தலைமையில் அமைந்துள்ளது. சமூகநீதியை காக்க, சனாதானத்தை அகற்ற என்றும் உழைக்கும் அவரது வழிகாட்டுதலை ஏற்று என்றும் இந்த நாட்டுக்காக மக்களுக்காக உழைக்க உறுதி ஏற்போம்" என்றார்.

இதையும் படிக்க    | " பொது சிவில் சட்டம் பிரிவினைகளை ஊக்குவிக்கும் " ப.சிதம்பரம் கருத்து .