அரசு மதுபானக்கடையில் திருட்டு...! போலீசார் விசாரணை..!

ஓசூர் அருகே அரசு மதுபானக்கடையின் சுவற்றை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை : போலீசார் விசாரணை

அரசு மதுபானக்கடையில் திருட்டு...! போலீசார் விசாரணை..!

ஓசூர் அடுத்த பாகலூர் அருகேயுள்ள முகுளப்பள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பட்டுவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா (45) என்பவர் மேற்பார்வையாளராகவும், ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வகுமரன் என்பவர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். விற்பனயாளர் செல்வகுமரன் அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்பட்ட 2 லட்சத்து 61 ஆயிரத்து 720 ரூபாய் ரொக்க பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு வழக்கம்போல கடையை பூட்டிச் சென்றுள்ளார். 

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு சென்ற மர்ம நபர்கள், கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்து கைவரிசையை காட்டியுள்ளனர். கடையில் இருந்த 2 லட்சத்து 61 ஆயிரத்து 720 ரூபாய் ரொக்கப்பணத்தையும், 29 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள்  ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். வழக்கம்போல்  காலையில் கடையை திறந்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் வெங்கடேசப்பா, பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அரசு மதுபான கடை ஊருக்கு வெளியில் இருப்பதால் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று முறை, திருட்டு சம்பவம் இந்த கடையில் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மதுபான கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு 2 லட்சத்தை 91 ஆயிரத்து 590 ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.