பட்டப் பகலில் ஆட்டை திருடிச் சென்ற இளைஞர்கள்...! விரட்டி பிடித்த பொதுமக்கள்...!

ஓமலூர் அருகே பட்டப் பகலில் ஆட்டை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்

பட்டப் பகலில் ஆட்டை திருடிச் சென்ற இளைஞர்கள்...! விரட்டி பிடித்த பொதுமக்கள்...!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தேக்கம் பட்டி கிராமம், குருவம் பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மனைவி ருக்குமணி (72). இவர் பத்து ஆடுகள் வைத்து மேய்து வருகிறார். இந்நிலையில் ருக்குமணி ஆடுகளை அருகில் உள்ள மேச்சல் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு  வந்த இரண்டு இளைஞர்கள், சரக்கு கிடைக்குமா என கேட்டுள்ளனர் அதெல்லாம் தனக்கு தெரியாது என ருக்குமணி கூறியுள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய ஒரு இளைஞர்  ருக்குமணியை கீழே தள்ளிவிட்டு, ஆட்டு கிடாய் ஒன்றை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே அங்கிருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொட்டியபுரம் பகுதியில் அவர்களை மடக்கிப் பிடித்தனர். 

மேலும், அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து இரண்டு வாலிபர்களையும், ஆட்டுக்கிடாயையும் கருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமம் பழைய காலனியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கௌதம் (29) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குணால் (29) என்பதும் தெரியவந்தது.  முன்னதாக கௌதம் பெயரில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ஓமலூரில் இதே சம்பவத்திற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.