தகாத உறவால் கர்ப்பமடைந்த பெண்...தனக்கு தானே பிரசவித்து குழந்தையை வீசி சென்ற இரக்கமற்ற தாய்..!

திருவள்ளூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பச்சிளம் சிசுவை வீசிச் சென்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தகாத உறவால் கர்ப்பமடைந்த பெண்...தனக்கு தானே பிரசவித்து குழந்தையை வீசி சென்ற இரக்கமற்ற தாய்..!

சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 3ம் தேதி சென்ற நோயாளிகள் சிலர், பச்சிளம் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் பெண் சிசுவை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம் இரவு கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர், சிறிது நேரத்திலேயே பிரசவம் முடிந்தது போல சாதாரணமாக வெளியே சென்ற சிசிடிவி காட்சியை கண்டு போலீசார் சந்தேகமடைந்தனர்.

விசாரணையில் அவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சாய்ராபானு  என தெரியவந்தது.  தனது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு கருவுற்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி தமக்கு பிரசவ வலி வந்ததால் மற்றொரு பெண்ணின் துணையோடு வயிற்றுவலி என கூறி மருத்துவமனை கழிவறைக்கு சென்று தனக்கு தானே குழந்தையை பிரசவித்து வீசி சென்று விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.