பங்குனி உத்திர திருவிழா கோலாகல கொண்டாட்டம்...!

பங்குனி உத்திர திருவிழா கோலாகல கொண்டாட்டம்...!

பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதுமுள்ள கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி பகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதேப்போன்று ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் திருக்கோயில் 83வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இதனையடுத்து இறுதி நாளான இன்று நொச்சி வயல் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வர கோயிலிருந்து புனித குளத்தில் நீராடி குலதெய்வத்தை வணங்கி பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையும் படிக்க : ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டத்தில்...ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது...!

இதேப்போல், சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து, தீச்சட்டி, கரும்பாலைத் தொட்டில், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். 

இதனைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி உடல் முழுவதும் சகதி பூசி மேள, தாளங்கள் முழங்க பக்தர்கள் வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.