தொடர் மழையால் சகதி காடாக மாறிய வாரச்சந்தை...வியாபாரம் பாதிப்பு..!

தொடர் மழையால் பரமக்குடி வாரச்சந்தை சகதிக்கடாக மாறியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர் மழையால் சகதி காடாக மாறிய வாரச்சந்தை...வியாபாரம் பாதிப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். பார்த்திபனூர், வீரசோழன், நயினார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவித்த கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட  பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாரசந்தையில் காய்கறி வியாபாரம் செய்வது வழக்கம். 

நேற்றிரவு முதல் பரமக்குடி முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாரச்சந்தை முழுவதும் சகதிகாடாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை மழை நீடித்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் இருப்பதால் அதிக அளவில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.