பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து... ரோந்துப்பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சோகம்...

மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சோகம்.

பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து... ரோந்துப்பணியில் இருந்த காவலர் உயிரிழந்த சோகம்...

மதுரை மாநகர் விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு 12.30மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்பாக  நின்றுகொண்டிருந்த போது  அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடிரென இடிந்து விழுந்தது. 

இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்கத்தூண் காவல்துறையினர் கட்டிட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உட்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில் 110ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவிற்கு பழமையான கட்டிடங்கள் உள்ள நிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டிட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கடந்த 2020ஆம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் கட்டிட விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.