முதலமைச்சரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்...!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் விதமாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையிலான மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. முதல் நிகழ்வாக சட்டப்பேரவையில் முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதே போல், தியாகி சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்தார். அப்போது மாநில அரசின் திட்டங்களுக்கு எப்படி முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து வரும் ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது மக்கள் விரோத செயல் எனக் கூறினார். ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று எனவும், பதவியில் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர்...!

இந்த மசோதாவுக்கு விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. தனித் தீர்மானத்துக்கு ஆதரவு என்றபோதும், முதலமைச்சர் - சபாநாயகர் குறுக்கிட்டு பதிலளித்ததால், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 10 மசோதாக்களும் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படவுள்ளது.