சென்னை : மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள்...! 2026 - க்குள் கொண்டுவர திட்டம்..!

சென்னை : மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள்...!  2026 - க்குள் கொண்டுவர திட்டம்..!

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோவில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை என மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் மெட்ரோ அமைய உள்ளது. 

இதில் 42 கி.மீ தூரத்திற்கு 48 இரயில் நிலையங்கள்  சுரங்கப் பாதையாக அமைய உள்ளது. அந்த வகையில் 10 மீட்டர் அகலம் கொண்ட சாலை பகுதிகளாக விளங்கும் பட்டாளம், திருமயிலை, கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை ஆகியவற்றில் அடுக்கடுக்கான சுரங்க பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் சுரங்கப் பாதையில், அருகருகே ரயில் வழித்தடத்தில் அமைக்கப்பட்டன. ஏனெனில் சாலைகள் அகலமாக இருந்தது.  ஆனால் இரண்டாம் கட்ட திட்டத்தில் சாலைகள் சற்று குறுகியதாக இருப்பதால், அடுக்கடுக்காக சுரங்க வழித்தடங்களை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4  வது வழித்தடத்தில் கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்ப்பேட்டை, பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் அடுக்கடுக்கான சுரங்க ரயில் பாதைகள் அமையவுள்ளன.இதில்  திருமயிலை தவிர்த்து மற்ற நான்கிலும் 15 மீட்டர் ஆழத்திற்கு ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

திருமயிலை ரயில் நிலையத்தில் மட்டும் 35 மீட்டர் ஆழத்திற்கு ஒன்றின் மேல் ஒன்றாக நான்கு சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு 3வது மற்றும் 4வது வழித்தட மெட்ரோ ரயில்களுக்கு மாறும் வசதிகள் செய்யப்படுகிறது.

இந்த ரயில் நிலையத்தில் ஒரு பகுதி பயணச்சீட்டு, ரயில் நிலைய வசதிகள், கட்டுப்பாட்டு அறைகள், கடைகள் அடங்கியதாக இருக்கும். அடுத்து மாதவரம் முதல் சிப்காட் (3வது வழித்தடம்) வரை செல்லும் ரயில்கள் 17 மீட்டர் ஆழத்தில் வழித்தடம் அமைக்கப்படும். இதே வழித்தட மெட்ரோ ரயில்கள் 35 மீட்டர் ஆழத்தில் மற்றொரு சுரங்கத்தில் மாற்று வழித்தடத்தில் இயங்கும்.

இதையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தட மெட்ரோ, 24 மீட்டர் ஆழ சுரங்கப் பாதையில் அமையவுள்ளது. இந்நிலையில் திருமயிலை ரயில் நிலையப் பகுதியில் பாறை மண்ணாக இருப்பதால் சுரங்கப் பணிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என  மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  சொத்து வரியை உயர்த்திய வழக்கு...! உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!