ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்...!

திருச்சி முடுக்குபட்டியில் வசித்து வரும் 150 க்கு மேற்பட்ட குடும்பங்களை அப்புறப்படுத்த முயற்சிக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்...!

திருச்சி கல்லுக்குழி பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது ரயில்வே நிர்வாகம், அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறி உடனடியாக இடத்தை காலிசெய்ய வலியுறுத்தி அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது அல்ல, இது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு எனவே இதில் நாங்கள் நூறு வருடங்களுக்கு மேலாக குடியிருப்பதால் நாங்கள் காலி செய்ய மாட்டோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க சென்றனர். ஆனால் கோட்ட அலுவலர் மனுவை வாங்காததாலும், பேச்சுவார்த்தைக்கு வராததாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ளே புகுந்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில  காவல்துறையினரும் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினரும், அவர்களை அப்புறப்படுத்தினர். ரயில்கள் எதும் வராத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.