பட்டியலின மக்களின் குலதெய்வ கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி போராட்டம்...

ராசிபுரம் அருகே, பட்டியலின மக்களின் குலதெய்வ கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி, போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டியலின மக்களின் குலதெய்வ கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி  போராட்டம்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிராப்பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், அப்பகுதியில் தங்களது குல தெய்வமான அய்யனாருக்கு கோவில் எழுப்பி, நீண்ட காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர், கோவிலில் இருந்த வேல்கம்பு மற்றும் சிலைகள் உள்ளிட்டவற்றை அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த நாமகிரிப்பேட்டை காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.