கூர்க்கா படைப்பிரிவு முதல் முப்படை வரை... பிபின் ராவத் கடந்து வந்த பாதை...

இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டிற்கே பேரிழப்பாக அமைந்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் ராணுவ பணியாற்றும் குடும்பத்தில் பிறந்து அவர் கடந்து வந்த பாதை நீண்டது.

கூர்க்கா படைப்பிரிவு முதல் முப்படை வரை... பிபின் ராவத் கடந்து வந்த பாதை...

உத்ததரகாண்ட் மாநிலத்தின் பவுரியில் 1958-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி பிறந்த பிபின் ராவத், இந்து ரஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய ராணுவத்தில் பல தலைமுறைகளாக பணியாற்றியுள்ளனர்.

டேராடூன் மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை படித்துள்ள பிபின் ராவத், அப்போதே கடக்வாஸலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்.

குன்னூரில் உள்ள வெலிங்டன் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், அமெரிக்காவின் ஃபோர்ட் லீவன்வொர்ட் நகரில் உள்ள ராணுவ கல்லூரியில் உயர் படிப்பை படித்துள்ளார்.

மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பில்., மேலாண்மை மற்றும் கணினிஅறிவியலில் பட்டயப்படிப்பை பெற்றுள்ளார்.

1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக ராணுவத்தின் கூர்க்கா துப்பாக்கிப்படை ஐந்தாவது பட்டாலியனில் சேர்ந்து பணியாற்றினார். இது அவரது தந்தை பணியாற்றி வந்த இடமாகும்.

ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய பிபின் ராவத், மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று, 19-வது காலாட்படை பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

பின்னர், 2016-ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி இந்திய ராணுவத்தின் 27-வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் அந்த பதவியை அலங்கரித்த முதலாவது ராணுவ ஜெனரல் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அந்த பதவியில் இருக்கும் போதே ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தது நாட்டிற்கே பேரிழப்பாக அமைந்துள்ளது.

இதனிடையே, பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.