தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவி.. அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு!!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 50 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவி.. அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு!!

நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவி துர்கா, தமிழில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

மாநிலத்திலேயே தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றது இவர் மட்டுமே. இதனால் இவருக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும், சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாணவியை நேரில் அழைத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன், 50 ஆயிரம் ரூபாய் வழங்கி கூக்குவித்தார். மாணவி துர்காவின் தந்தை, செல்வகுமார், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். தமிழில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவி துர்கா, வேளாண் பாடப்பிரிவை எடுத்து படிக்கப்போவதாக தெரிவித்தார்.