இலவச வீட்டு மனை பட்டா ரத்து: வேலி அமைக்க வந்த அதிகாரி..! தாசில்தார் காலில் விழுந்து அழுத மூதாட்டி..!

இலவச வீட்டு மனை பட்டா ரத்து: வேலி அமைக்க வந்த அதிகாரி..! தாசில்தார் காலில் விழுந்து அழுத  மூதாட்டி..!

சங்கரன்கோவில் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை தற்போது ரத்து செய்ததாக கூறி வேலி அமைக்க வந்த வருவாய் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் தாசில்தார் காலில் மூதாட்டி விழுந்து அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.இவர்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 117 குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கடந்த அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த பட்டாவை அரசு ரத்து செய்ததாக கூறி இடத்தினை சுற்றி வேலி அமைக்க வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் வட்டாட்சியர் பழனிவேல்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

அப்போது திடீரென மூதாட்டி ஒருவர் தாசில்தாரின் காலில் விழுந்து அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்துவிட்டு திமுகவினர் தங்களுக்கு வேண்டிய பட்டவர்களுக்கு அந்த இடத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க     | லண்டன், துபாய் பூங்காக்கள் போல இனி செம்மொழி பூங்காவும் ...” - தமிழ்நாடு அரசு.