யானைகள் வலசை செல்லும் பாதை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் யானைகள் வலசை செல்லும் பாதையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

யானைகள் வலசை செல்லும் பாதை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின பாதுகாப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள்  சதீஷ்குமார்,  பாரதிதாசன், சுப்பிரமணியம் தண்டபாணி, பொங்கியப்பன், இளந்திரையன் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள யானைகளின் முக்கிய வழித்தடப் பாதையான கல்லார் வனப்பகுதி மற்றும் காட்டை ஊடுருவிச் செல்லும் மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை நீதிபதிகள் பார்வையிட்டனர். மேலும் யானைகள் தங்களது வழக்கமான வலசைப் பாதையில் இடையூறு எதுவும் இன்றி செல்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.

யானைகள் வழித்தடத்தில் குறுக்கிடும் மலையையொட்டிய  நெடுஞ்சாலையை தவிர்த்து வாகனங்கள் வேறு வழியில் கடந்து செல்லும் வகையில் கல்லாரிலிருந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை சுமார் 2 புள்ளி 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்டப் பாலம் கட்ட முதற்கட்டமாக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் தொடங்க உள்ளதாக நீதிபதிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் இயற்கை சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஆய்வின் போது முதன்மை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை வனப்பாதுகாவலர் முகமது சையத் அப்பாஸ், கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் நாகநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், நீலகிரி  ஆட்சியர் அம்ரீத், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் கோஸ்ல உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.