அண்ணாமலை இல்லாமல் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் பாஜக தலைமையிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இதனால் சென்னையில் நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இந்த  நிலையில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கமலாயத்தில் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக நிர்வாகிகள், கரு நாகராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுடன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பின்  செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, அதிமுக பாஜக கூட்டணி நீடிக்க விரும்புவதாகவும், இதற்காகவே தேசியத் தலைவர்கள் பேசி வருவதாகவும் கூறினார்.  அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கூட்டணி குறித்து கட்சி தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார். 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக விளக்கம் அளிக்க  அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதனால் பாஜகவில் இருந்து அண்ணாமலை ஓரம்கட்டப்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!