பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை... நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு...

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை... நல வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு...

தமிழகத்தில் கொரோனாவின் போது பணியாற்றிய செய்தியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.. மேலும் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர் களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேசிய மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என கூறியிருந்தார். இதனை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும், பத்திரிக்கையாளர்கள் மொழித்திறன் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றார். மேலும் இளம் பத்திரிக்கையாளர்கள் உயர்கல்வி படிக்க பயிற்சி பெற நிதி உதவிகள் வழங்கப்படும் எனவும் பணிக்காலத்திலும் பத்திரிக்கை குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த மூன்று லட்சத்தை உயர்த்தி 5 லட்சமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் நலவாரியம் இந்நிலையில் செய்தித்துறை அறிவிப்பின்படி பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 6.9 .2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரமத்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது, தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்கள் முன் களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு நலவாரிய உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார் அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் நல வாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஆணையில் பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை முறையான தொழில்நுட்பப் படிப்பு திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை வழங்கப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களின் புதிய நல உதவித் திட்டங்களுக்கான தகுதிகள் மற்றும் வரையறைகள் குறித்து தனியே ஆணைகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்திரிக்கையாளர் நலவாரிய உதவித் திட்டங்களை வகுத்து செயல்படுத்த செய்து துறை அமைச்சரை தலைவராகவும் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும் அலுவல் சாரா உறுப்பினர்களாக ஆறு நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும், பத்திரிக்கையாளர் நல வாரியத்திற்கு என புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் நடைமுறை உள்ள பத்திரிக்கையாளர் ஓய்வூதிய பரிசீலனை கலைக்கப்படுவதுடன், பத்திரிக்கையாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களை கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதையடுத்து பத்திரிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.