நீதிபதியின் நாக்கை அறுப்பதாக பேசிய விவகாரம்...! சரணடைந்த காங்கிரஸ்காரர்...!!

நீதிபதியின் நாக்கை அறுப்பதாக பேசிய விவகாரம்...! சரணடைந்த காங்கிரஸ்காரர்...!!

நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என பேசிய  திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி மாநகர துணைத் தலைவர்  மணிகண்டன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மோடி சமூகத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக கூறி சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த சூரத் நீதிமன்ற நீதிபதி எச்.வர்மா ராகுல் காந்திக்கு  2 வருடம்  தண்டனை என தீர்ப்பு வழங்கினார்.  இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே திண்டுக்கல்லில் கடந்த 6ம் தேதி காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் மணிகண்டன் "தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்பேன்" என பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் பொது இடத்தில் அவதூறாக பேசுதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து தனது கட்சியினருடன் ஊர்வலமாக  வந்து  திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்தார். வரும் வழியில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது