அமலாக்கத்துறை சோதனை: "இது எல்லாம் நாங்கள் பார்க்காதது கிடையாது" பொன்முடி துணிச்சல்!

அமலாக்கத்துறை சோதனை: "இது எல்லாம் நாங்கள் பார்க்காதது கிடையாது" பொன்முடி துணிச்சல்!

அமலாக்கத்துறை விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம் எனவும்  இது எல்லாம் நாங்கள் பார்க்காதது கிடையாது என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்தினார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழக அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகள் நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கல்லூரி அளவில், பல்கலைக்கழக அளவில், மாநில அளவில் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் உருவாக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் 100 சதவீதம் ஒரே மாதிரி இருக்கும். மற்ற பாடங்களில் 75 சதவீதம் ஓரே மாதிரி‌ பாடத்திட்டம் இருக்கும் எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் ஒரு கல்லூரியில் படித்த மாணவர் வேறு கல்லூரிக்கு செல்லும் பொழுதும். ஒரு பல்கலைக்கழகத்தில் கீழ் பணியாற்றும் பேராசிரியர் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறும் போதும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், இந்த கல்வி ஆண்டு முதல் 90 சதவீத படிப்புகளில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக பாடத்திட்டம் உருவாக்கப்படும். மேலும் புதிய படிப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக கொண்டுவரப்படும். இந்த ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உருவாக்கும் முடிவை அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும்  ஏற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் உலக அளவில் உயர்த்தப்படும். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்புகள் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.20,000 ஊதியம் ரூ.5,000 உயர்த்தப்பட்டு 25,000 ரூபாயாக வழங்கப்படும் எனக் கூறினார்.

தேசிய கல்வி கொள்கையில் நல்லது இருந்தால் கூட அதனை எடுத்துக்கொள்வோம். ஆனால் மாநிலத்துக்கு என்று பாடத்திட்டம் வேண்டும். அது நமக்கு ஏற்ப இருக்கும்.

மேலும் சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ஸ்லெட் தேர்வு  இந்த ஆண்டு நடத்தப்படும் எனவும்  இனிமேல் ஆண்டுதோறும் ஸ்லெட் தேர்வு முறையாக நடத்தப்படும் எனவும் கூறிய அவர், கல்லூரிகளில் வெவ்வேறு மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கல்லூரிகளில் ஒரே காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும்‌‌ என அறிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், அமலாக்கத்துறை விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம் எனவும்  இது எல்லாம் நாங்கள் பார்க்காதது கிடையாது எனக் கூறினார். மேலும், முதல்வரே சொல்லிவிட்டார்‌ என சுட்டிக்காட்டிய அவர் இதை சட்ட ரீதியாக சந்திப்போம் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:மணிப்பூர் விவகாரம்; மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு!