ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மற்றும் முக கவசம் மட்டுமே தடுப்பு ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முன் களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு வருமாறு:-

முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்  என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் இன்று தன்னுடைய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு உள்ளார்.

தமிழகத்தின் இந்நாள் முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.