புத்தாண்டில் வீட்டிலிருந்து காணாமல் போன சிறுவன்... ஒரே மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்...

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே வீட்டிலிருந்து காணாமல் போன நான்கு வயது சிறுவனை சுமார் 45 நிமிட நேரத்திற்குள் மீட்ட ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் அச்சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

புத்தாண்டில் வீட்டிலிருந்து காணாமல் போன சிறுவன்... ஒரே மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்...

கோவையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு முழுவதும் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்த நிலையில் ரத்தினபுரி அடுத்த கக்கன் வீதி பகுதியில் தனது 4 வயது மகனை காணவில்லை என இரவு 11 மணியளவில்  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த உமாங் மற்றும் தெம்னு தம்பதியர் தேடி வந்தனர்.

மேலும் அங்கிருந்த உதவி ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் தலைமை காவலர் நாகராஜ் ஆகியோரிடம் அரை மணி நேரத்திற்கும் மேலாக தனது மகனை காணவில்லை என கூறி அவர்கள் கதறி அழுதனர். இதை அடுத்து போலீசார் உடனடியாக சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் சிறுவனை தேடிய நிலையில் டாடாபாத் பகுதியில் தனியே நடந்து சென்ற சிறுவனை மீட்ட போலீசார் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாநகர காவல் ஆணையர், வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நேற்று இரவு முழுவதும் மாநகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போதும்   தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியையும் தாண்டி உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் அடங்கிய குழுவினர்  மனிதநேயத்துடன் செயல்பட்டு காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.